Skip to content

பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்

தாவரத்தின் நுண்ணூட்டச் சத்துக்களில் போரானின்  பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பயிரானது போரானை மண்ணில் இருந்து போரிக் ஆசிட் மற்றும் டை ஹைட்ரஜன் போரேட் (H3BO3 and H2BO3) என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கிறது.  இயற்கையாக போரான் டோர்மலைன் எனப்படும் தாதுவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் காட்டிலும் வறண்ட நிலங்களில் இத்தாது அதிகமாக காணப்படுகிறது. 33% இந்திய மண்ணில் போரான் குறைபாடு உள்ளது. இந்திய தாவரத்திற்க்கு கிட்டக்கூடிய   மண்ணில் போரான் 0.04 – 7.40 பிபிஎம் என்ற அளவில் உள்ளது.

தாவரத்தில் போரானின் பணிகள் : போரான் தாவரத்தின் செல்சுவர் உற்பத்தி, புதிய செல்கள் உருவாதல், செல் சவ்வுகளின் கட்டமைப்பு மற்றும் அமைப்பை பராமரிக்கிறது. போரான் மகரந்தத்தூள் உற்பத்தி,  மகரந்த குழாய் வளர்ச்சி மற்றும் மகரந்த சேர்க்கையிலும் முக்கியப் பங்காற்றுகிறது.  தாவரத்தின் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் கடத்தப்படுவது முக்கிய பங்காற்றுகிறது. ஹார்மோன்களின் அளவை கட்டுப்படுத்துவதிலும் நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.

போரான் குறைபாடு மற்றும் அதன் பாதிப்பு : போரானின் அளவு பயிர்களில் 25 பிபிஎம் என்ற அளவிற்கு குறைந்தால் போரான் குறைபாடு ஏற்படுகிறது. போரான் செல் பிரிதலில் முக்கிய பங்கு வகிப்பதால் போரான் குறைபாடு புதிதாக உருவாகும் தாவரத்தின் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இலையின் நுனி வேரின்  நுனி ஆகிய இடங்கள் பாதிக்கப்படுகிறது. போரான் அளவு குறைவதானால் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் சரியாக கடத்தப்பட்டாமல் வேர் திரவம் வெளியேறுவதன் அளவு குறைகிறது. இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் அளவு வேரின் அருகில் குறைகிறது. போரான் குறைபாட்டினால் பூக்களின் எண்ணிக்கையும் தாவரத்தின் வேரின் வளர்ச்சியும் குறைகிறது. போரான் தாவரத்திற்கு அளிக்கப்படும் போது சரியான அளவை பின்பற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக அளித்தால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும். மண்ணில் போரானின் அளவு (0.46 பிபிஎம் ) என்ற அளவிற்க்கு  குறைவாக இருந்தாலோ அல்லது பயிர் பற்றாக்குறை அறிகுறியின் அடிப்படையில் அளிக்க வேண்டும்.

தாவரத்தின் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் போரான் குறைபாடு விளைச்சல் கடுமையாக பாதிக்கின்றது முக்கியமாக காய்களில் போரான் பாதிப்பு அதிகமாக தென்படுகிறது. போரான் சத்து பற்றாக்குறை ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொரு மாதிரியாக காணப்படும் எடுத்துக்காட்டாக முட்டைக்கோஸில் போரான் குறைபாடு தண்டு செங்குத்தாக பிளவுபட்டு அந்த இடம் பழுப்பு நிறமாக காணப்படும். காலிஃபிளவரிலும் இதே அறிகுறிகள் தென்படும் மேலும் புதிய இலைகள் கருகி காணப்படும் வெண்டையில் காய்கள் வளைந்து சுருக்கமாகவும் இலையில் பழுப்பு நிறம், நடுவில் சுத்தி பச்சை வெள்ளை நிறம் காணப்படும்.

  • சூரியகாந்தியில் போரான் குறைபாட்டின் இலைகள் வளைவாகவும் சுருங்கியும் சிறிதாகவும் தண்டின் நீளம் குறைவாகவும் காணப்படும். பூவானது ஒழுங்கற்ற வடிவில் காணப்படும் விதை பிடிக்காது.
  • தக்காளியில் இளம் இலைகள் உருமாறி காணப்படும். இலை மேற்புறம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் காய் கட்டுவதில் பாதிப்பு ஏற்படும்.
  • வாழையில் இலைகள் சுருண்டு, ஒழுங்கற்ற வடிவில் உள்ளது வெள்ளை தழும்பு இலையின் நரம்பிற்க்கு இதற்கு இணையாக காணப்படும் காய்கள் பிளவுபட்டு காணப்படும்.
  • தென்னைகள் காய்கள் சுருங்கியும் இலையின் நுனி மடங்கியும் காய்கள் பிளவுபட்டும் காணப்படும்.

போரான் குறைவிற்கான காரணங்கள் :

போரான் சத்துக் குறைபாடு கீழ்கண்ட காரணங்களால் அதிகமாக தென்படுகிறது. உவர்த்தன்மை, குறைந்த அங்ககசத்து, அதிக நைட்ரஜன், கால்சியம், குளிர் நேரங்களிலும் அதிக வறட்சி நேரங்களிலும் போரான் சத்துக் குறைபாடு காணப்படுகிறது. நீர் இல்லாத இடங்களில் வேரில் இருந்து போரான் இலைக்கு கடத்தப்படுவது குறைகிறது. அதிகமாக இரும்பு ஆக்சைடு உள்ள செம்மண் வகைகளில் போரான் சத்து குறைவாக காணப்படுகிறது.

 

அதிக போரான் தேவைப்படும் பயிர்கள் மிதமான போரான் தேவைப்படும் பயிர்கள் குறைந்த போரான் தேவைப்படும் பயிர்கள்
முட்டைகோஸ்

பீட்ரூட்

காலி பிளவர்

சூரிய காந்தி

வெண்டை

கத்தரி

கேரட்

வெங்காயம்

முள்ளங்கி

தக்காளி

உருளைக்கிழங்கு

மக்காச்சோளம்

பீன்ஸ்

பட்டாணி

வெள்ளரி

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

போரான் உரங்கள்:

போரான் உரங்கள் போரான் அளவு
போராக்ஸ்

சொலுபார்

போரிக் ஆசிட்

போரான் பிரிட்ஸ்

11 %

20 %

17 %

14 %

 

இதில் போராக்ஸ் பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தபடும் உரம் ஆகும். போரான் பிரிட்ஸ் எனப்படும் உரமானது மெதுவாக போரானை வெளியிடுவதால் மணற்பாங்கான பகுதிக்கு ஏற்றது.

 

  • தக்காளியில் போராக்ஸ் 5 கிராம் / லிட்டர்  என்ற விகிதத்தில் 3 முறை 15 நாள் இடைவெளியில் பூக்கும் பருவத்திலிருந்து  அடிக்க வேண்டும்.
  • வாழையில் போராக்ஸ் 0.1 % (1 கிராம்/ லிட்டர்) என்ற அளவில் 3, 5 மற்றும் 7 வது மாதத்தில் அடிக்க வேண்டும்.
  • சூரிய காந்தியில் போராக்ஸ் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் (65-85 நாட்களில்) பூக்கும் பருவத்திலிருந்து அடிக்க வேண்டும்.
  • பருத்தியில் போராக்ஸ் 0.1 % என்ற விகிதத்தில் காய்கட்டும் பருவத்தில் 7 – 10 நாள் இடைவெளியில் 2 முறை அடிக்க வேண்டும்.
  • தென்னையில் போரான் குறைபாட்டின் அறிகுறி தென்பட்டபிறகு ஒரு மரத்திற்க்கு போராக்ஸ் 50கிராம் என்ற அளவில் 1 மாத இடைவெளியில் 2 முறை வைக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news