Skip to content

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்:

  • மர நிழல்களில், நல்ல காற்றோட்டமான இடங்களில் மாடுகளை கட்ட வேண்டும்.
  • தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பு காலையிலும் மற்றும் மாலை நேரங்களிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
  • வெயில் காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படும் அதனால் கால்நடைகளின் அருகில் நாள் முழுவதும் தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதேபோல கால்நடைகளை ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை நன்றாக குளிப்பாட்ட வேண்டும் மாடுகளின் மேலே ஈர சாக்கினை நனைத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஈர சாக்கை நனைத்துப் போடும் போது மாட்டினுடைய உடலில் உள்ள வெப்பம் வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும். எனவே 4 முதல் 5 முறை குளிப்பாட்டுவதே சிறந்தது.
  • மதிய வேளையில் பசுந்தீவனங்களை மாடுகளுக்கு கொடுக்கலாம். அதேபோல கோடைகாலத்தில் வைக்கோலின் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் கிடைக்கும்போதே வாங்கி பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
  • திட்டமிட்டு போதிய பசுந்தீவனம் உற்பத்தி செய்து கொடுக்கலாம். இது நல்ல செரிமானத்திற்கும், அதிகப்படியான பால் உற்பத்திக்கும் உதவும்.
  • வெப்பத்தாக்கம் குறைந்த நேரத்தில் பால் கறக்கலாம். இதனால் அதிகம் பால் கறக்கும் பசுக்களின் உடலில் இருந்து வெளியிடப்படும் வெப்பமானது குறையும்.
  • பண்ணையைச் சுற்றி பசுமையான புல் தரைகளை உருவாக்கலாம். இது பண்ணையில் வெயில் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
  • நம்முடைய சூழலுக்கு ஏற்றாற் போல் கால்நடைகளைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியம்.
  • மாட்டுக் கொட்டகையில் மாட்டினை கட்டும்பொழுது சரியான காற்றோட்டம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது சிறந்தது. அதேபோல, வெயில் காலங்களில் மாட்டுக்கொட்டகையில் மின்விசிறி போடுவது சிறந்தது. ஜன்னலில் ஈர சாக்கினை நனைத்து கட்டி விடும் போது வெளியே இருந்து வரும் வெப்பக்காற்று சற்று தணிந்து இதமான காற்றாக உள்ளே சென்று வரும்.
  • கோடை காலத்தில் மாடுகளுக்கு தாது உப்பு நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு 30 கிராம் வீதம் காலை அல்லது மாலை வேளையில் தினமும் கொடுப்பது சிறந்தது.
  • அதிகமாக மூச்சு வாங்கும் மாட்டிற்கு இட்லி சோடா (சோடியம் பைகார்பனேட்) ஒரு நாளைக்கு 30 கிராம் வீதம் கொடுத்தால் அதிகம் மூச்சு வாங்கும் பிரச்சனை குறையும்.
  • தற்போது கொரோனா நோய் தீவிரமடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் தேவையில்லாத பார்வையாளர்களை பண்ணைக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே அனுமதித்தாலும் நன்றாக சோப்பு போட்டு கால், கைகளை கழுவிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
  • பண்ணைக்கு வருபவர்களில் முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் உள்ளே விட வேண்டும். அதேபோல நாமும் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மாடுகளை மேய்க்கும் போது சமூக இடைவெளி விட்டு மேய்க்க வேண்டும். காரணம் என்னவெனில் மாடுகளுக்கு நோய் வரவில்லை என்றாலும் நமக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.
  • பண்ணையை தினமும் நீரைக் கொண்டும், வாரம் ஒரு முறை படிகார சோடாவைக் கொண்டும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கும் போது மாடுகளுக்கு தொற்று நோய் பரவுவது தவிர்க்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றும் போது கால்நடைகளை வெயிலின் தாக்கத்திலிருந்து மீட்டு நன்றாக பராமரிக்கலாம்.

கட்டுரையாளர்: மரு.து. தேசிங்குராஜா, கால்நடை உதவி மருத்துவர்,

கால்நடை மருந்தகம், ஆறகளூர்.

தொடர்புக்கு: 9443780530, மின்னஞ்சல்: desinguraja@hotmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj