Skip to content

   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

நீர் பற்றாக்குறையான நிலமா? என்ன விவசாயம் செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குறைந்த அளவே நீர் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து விவசாயிக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய சூரியகாந்தி விவசாயம் இருக்க நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? குறைந்த வேலையாட்களைக் கொண்டே அதிக வருமானம் பார்க்கலாம் இந்த சூரியகாந்தி விவசாயத்தில் என்கிறார்கள் விவசாயிகள்.

மானாவாரியாக இருந்தால் ஆடிப்பட்டத்திலும், கார்த்திகைப் பட்டத்திலும் இதை விதைக்க வேண்டும். கிணற்று நீர்ப்பாசனமாக இருந்தால் சித்திரையிலும் மார்கழியிலும் இதனை சாகுபடி செய்யலாம்.

திருப்பதி செல்லும் வழியில் திருத்தணியைத் தாண்டினால், நகரி வரை எங்கு பார்த்தாலும் சூரியகாந்தி விவசாயம்தான். இவ்வளவிற்கும் இது நீர்ப்பற்றாக்குறை மிகுந்த பகுதிதான். என்றாலும் விடாமல் சூரியகாந்தி பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கிறார்கள். நகரி அருகில் சூரியகாந்திச் செடிகளுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்த விவசாயிகள் சிலரைச் சந்தித்து சூரியகாந்தி சாகுபடி செய்வது பற்றிக் கேட்டோம்.

”90 முதல் 100 நாட்களுக்குள் பயிரிட்டு, அறுவடை செய்து நல்ல லாபம் பார்க்கக்கூடியது இந்த சூரியகாந்தி சாகுபடிதான்” என்று நம்பிக்கை துளிர்க்கப் பேசினார்கள். சூரியகாந்தி விவசாயம் செய்ய ஏற்ற நிலம் எது என்பது முதல் அறுவடை மகசூல் வரை விலாவாரியாகப் பேசினார்கள். இது மற்ற விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

”பொதுவாக சூரியகாந்தி விவசாயத்தில் இறங்கும்முன் நிலத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வண்டல் அல்லது செம்மண் நிலமாக இருந்தால்தான் நல்லது. இந்த நிலத்தை டிராக்டர் மூலம் இரும்புக் கலப்பையால் மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டும் நன்கு உழவேண்டும்.

பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 30 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல ரக விதைகள் இருந்தாலும் இந்தப் பகுதிக்கு கோ.எஸ்.எக்.-2, சன்பிரிடு ரகங்கள்தான் நல்லது. நிலத்துக்குத் தக்கவாறு விதை ரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். விதையை விதைநேர்த்தி செய்த பின்னர் நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். (ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக விதை நேர்த்தி செய்வதாக இவர்கள் கூறுகிறார்கள்), நிழலில் உலர்த்திய விதைகளை வரிசையாக பார்களின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

பொதுவாக 5 டன் மக்கிய தொழுஉரம் 24 கிலோ தழைச்சத்து, 36 கிலோ மணிச்சத்து, 24 கிலோ சாம்பல் சத்து ஆகியவை உரமாக இடவேண்டும். நாங்கள் மண்பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களைத் தேர்வு செய்கிறோம். சிலசமயம் ரசாயன உரங்கள் கலந்து இட்டால்தான் சூரியகாந்தி நன்கு வளர்கிறது. இயற்கை உரம் என்றால் முழுக்க முழுக்க அதிலேயே இறங்கிச் செய்து லாபம் பார்ப்பவர்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் ரசாயன உரத்திற்குப் பதிலாக ஆட்டு எருவை மட்டும் பயன்படுத்துகிறவர்கள்.

அதேபோல் விதை நட்டு நீர் பாய்ச்சிய பின்பு 3-ம் நாளில் களைக்கொல்லி மருந்தை தெளிக்க வேண்டும். அது எந்த வகையான மருந்து என்பதை நிலத்தை வைத்தே சொல்ல முடியும். இன்னும் பூக்களில் விதைகள் நன்றாகப் பிடிக்கவும் விதைகளின் மணிகள் கெட்டியாக உருவாகவும் நுண்ணூட்டச் சத்துகள் தெளிக்க வேண்டும்.

பொதுவாக மற்ற பயிர்களோடு ஒப்பிடும்போது சூரியகாந்திப் பயிரில் பூச்சிகள் நோய் பாதிப்பு குறைவு. ஆனால் கிளிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும். அவற்றை விரட்ட கொஞ்சம் செலவு செய்தாக வேண்டும்.

விதைத்த 90 முதல் 100 நாளில் பூக்கள் நன்கு முதிர்ந்து அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கருக்கு 1000 முதல் 1800 கிலோ சூரியகாந்தி விதைகள் கிடைக்கும். அறுவடையைக் கேள்விப்பட்டு வியாபாரிகள் களத்துமேட்டுக்கே வந்து, எடை போட்டு வாங்கிட்டுப் போயிடுவாங்க. சூரியகாந்தியை விவசாயம் செய்வது எளிது. சாகுபடிச் செலவு குறைவு. பராமரிப்புச் செலவும் குறைவு. ஆனால் வருமானம் அதிகம். நீர்ப் பற்றாக்குறை காலங்களில் யார் வேண்டுமானாலும் சூரியகாந்தி பயிரிடலாம்” என்று விளக்கம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news