Skip to content

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

நீர் உறிஞ்சு குழிகள்

         மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி இடைவெளியில் வரிசையாகக் குழிகள் எடுக்க வேண்டும். அவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த வரிசையில் குழிகள் எடுக்க வேண்டும். இரண்டு வரிசைகளில் உள்ள குழிகளும் ‘ ஜிக்ஜாக்’ முறையில் இருக்க வேண்டும் அடுத்த சற்று இடைவெளியில் மூன்றாவது  வரிசையில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை, மலைக்கு எதிர் திசையில் போட்டுக் கரை அமைக்க வேண்டும். இந்த அமைப்புக்கு ‘ வாட்’ அல்லது ;நீர் உறிஞ்சு குழி’ என்று பெயர்.

மலையிலிருந்து வேகமாக ஓடிவரும் மழைநீர், மண்ணையும் அடித்துக்கொண்டு வரும். அந்த மண் இந்தக் குழிகளில் வந்து விழும். மழை நீர், மூன்று வரிசை குழிகளிலும் நிரம்பி, தேங்கிப் போகும். அப்படிப் போகும்போது, நீரோடு வந்த மண்ணெல்லாம் குழிகளில் சேகரமாகிவிடும். அந்தக் குழிகளில் தேங்கும் நீர், நிலத்துக்குள் இறங்கும்.

நில வரப்புகள்

                வாட் அமைப்புக்கு அடுத்தபடியாக, அப்பகுதியின் நில அமைப்பைப் பொறுத்து, விவசாய நிலங்களில் வரப்புகள் அமைக்க வேண்டும். நிலத்தின் பள்ளமான பகுதியில் வரப்பை ஒட்டி, ஒன்றரை அடி முதல் மூன்று அடி வரை அகலவாக்கில் வரப்பு அமைக்க வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில் இதைத் தொடர்ச்சியாக அமைக்க வேண்டும். இந்த வரப்பின் நீளம் 10 அடி முதல் 20 அடி வரையும், அகலம் ஒன்றரை அடி முதல் மூன்று அடி வரையும் இருக்கலாம்.

    குழியெடுக்கும்போது கிடைக்கும் மண்ணை, எதிர்ப்பக்கம் கொட்டிக் கரை அமைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மழைநீர், அந்தக் குழிகளில் தேங்கி, நிலத்துக்குள் இறங்கும். அது மட்டுமல்லாமல், நிலத்தின் சத்தான மேல் மண், நிலத்தை விட்டுப் போகாமல், குழிக்குள்ளேயே தங்கிவிடும். இந்தக் குழிகள் நிரம்ப ஏழு முதல் பத்து ஆண்டுகள் ஆகும். இந்த அமைப்புக்கு ‘டிரன்ச் கம் ஃபீல்ட் பண்டு’ எனப் பெயர்.

பண்ணைக்குட்டை

    வரப்பமைத்து முடித்த பிறகு, முக்கியமாக அமைக்க வேண்டியது, பண்ணைக்குட்டை ஒவ்வொரு நிலத்திலும். நில அமைப்புக்கு ஏற்ப சிறியதாகவோ பெரியதாகவோ நிச்சயம் ஒரு பண்ணைக்குட்டை இருக்க வேண்டும். நீள, அகலம் எப்படி இருந்தாலும் ஆழம் 5 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பண்ணைகுட்டைகளின் கரைகளில் கால்நடை தீவனங்களை வளர்க்கலாம். காட்டாமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் கரை பலமாகும். அதிக நிலப்பரப்பு இருப்பவர்கள் இரண்டு, மூன்று பண்ணைக்குட்டைகள் வரை எடுக்கலாம். நீர் இருப்பைப் பொறுத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபடலாம்.

உலர் தடுப்பணை

    மலைகளிலிருந்து இறங்கிவரும் நீர், ஓடைகள் வழியாக ஓடிக் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை அடையும். அப்படிச் செல்லும்போது ஓடையின் பக்கவாட்டு பகுதிகளை அரித்துக்கொண்டு  ஓடும். அந்தமாதிரி அரிமானம் ஏற்படும் இடங்களில் ஓடையின் பக்கவாட்டுப் பகுதிகளில் கற்களை அடுக்கி, அரிமானத்தைத தடுக்க வேண்டும். அதன் பிறகு, தேவையான இடங்களில் கற்களை அடுக்கி வைத்து, தடுப்பணைகளை அமைக்க வேண்டும். இதற்கு, ‘உலர் தடுப்பணை’ எனப் பெயர். ஓடைகளில் வரும் நீர், இந்தத் தடுப்பணைகளால் தடுக்கப்பட்டு, வேகம் சற்று மட்டுப்பட்டுக் கல் இடுக்குகள் வழியாக வழிந்தோடும். அதேபோல மண், சிறுகற்கள் உள்ளிட்டவை நீரோடு அடித்து வரப்படும் மற்ற பொருள்களும் இங்கே தடுக்கப்படும். ஓடை குறுகியதாக இருக்கும் இடத்தில்தான் உலர் தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.

கம்பி வலை தடுப்பணை

    உலர் தடுப்பணைகளுக்கு அடுத்தபடியாக ஓடை அகலமாக உள்ள இடங்களில் கம்பி வலை தடுப்பணைகளை அமைக்க வேண்டும். இந்த இடங்களில் உலர் தடுப்பணைகள் அமைத்தால் நீரில் அடித்துக்கொண்டு போய்விடும். அதனால் கம்பி வலை அமைத்து, அதில் கற்களை அடுக்கி தடுப்பணை அமைக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் கேபியான் தடுப்பணை என்பார்கள்.

நில உட்புற அமிழ்வுக் குட்டை

    நிலத்துக்குப் பண்ணைக்குட்டை எத்தனை முக்கியமோ ஓடைக்கு நில உட்புற அமிழ்வுக் குட்டை அத்தனை முக்கியம். ஓடைகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மூன்றடி முதல் நான்கடி வரை பள்ளம் எடுத்துக் குட்டைகளை உருவாக்க வேண்டும். ஓடையில் வரும் நீர், இந்தக் குட்டைகளில் தேங்கி, அதன் பிறகு, வழிந்துபோகும் வகையில் இந்த அமைப்புச் செயல்படும். இதன் மூலம் ஓடையில் ஓடும் நீர், வரத்து குறைந்த பிறகும், சில நாள்களுக்குக் குட்டையில் நீர் இருக்கும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்படுவதுடன், அருகில் உள்ள நீராதாரங்களில் நீர்மட்டம் உயரும். இந்த அமைப்புக்கு நில உட்புற அமிழ்வுக் குட்டை என்று பெயர்

தடுப்பணை

        இறுதியாக ஓடைகளில் தேவையான இடங்களில் சிமென்ட் மூலமாகக் கட்டித் தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும்.. இந்தத் தடுப்பணைகள் மூலமாகத் தண்ணீர் தேங்கி, பிறகு வழிந்து ஓடும். இதனால் ஓடைகளின் பக்கவாட்டு பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குட்டைகள், கிணறு, போர்வெல் போன்ற நீராதாரங்களில் நீர்மட்டம் உயரும்.

கிணற்று நீர் செறிவூட்டும் குழி

    கிணற்றிலிருந்து மூன்று அடி தூரத்தில் குழியெடுக்க வேண்டும். ஒரு கன மீட்டர் அளவில் எடுக்கப்படும் இந்தக் குழியில் சிமென்ட் வளையங்களை ஒன்றின் மீது ஒன்றாக மூன்று வளையங்களை  வைக்க வேண்டும். வளையத்தின் அடிப்பகுதியில் கூழாங்கற்களை அரையடி உயரம் இட வேண்டும். அதற்கு மேல் ஓர் அடி உயரத்துக்குப் பெரிய கற்களை இட வேண்டும். இந்த இரண்டு கற்களுக்கும் இடையில் ஒரு பி.வி.சி குழாயை வைத்து, அந்தக் குழாயின் மறுமுனை கிணற்றுக்குள் இருப்பதுபோல் அமைத்துக்கொள்ள வேண்டும் அதன் பிறகு, உறை முழுவதும் மணலால் மூடி விட வேண்டும். இப்போது இதில் விழும் மழைநீர், கற்களால் வடிகட்டப்பட்டு, கிணற்றுக்குள் சென்று சேகரமாகும். அதே நேரத்தில் நிலத்துக்குள்ளும் கசிந்து ஊடுறுவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj