Skip to content

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும்.

ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், சாதாரண நடவு செய்த நிலங்களில் புகையான் அதிகமாகத் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நிலங்களில் முதலில் தண்ணீரை முழுமையாக வடித்துவிட வேண்டும்.

மழையில் பாதித்த பயிருக்கு முதலில் 10 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவையும்; வாரம் ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டியையும், வேப்பங்கொட்டை வெள்ளைப்பூண்டுக் கரைசலையும் மாற்றி மாற்றித் தெளித்து வந்தால், பயிரில் பூச்சித்தாக்குதலை ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத்திவிடலாம்.

நெல் பயிரைத் தாக்கும், குலைநோய், பழுப்பு இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலை உறை அழுகல் நோய், இலை உறை கருகல் நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 10 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். நெல் ‘துங்ரோ’ நச்சுயிரி நோய், பூச்சி மூலமாகப் பரவும் நோய் என்பதால், பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலே இந்த நோய் கட்டுக்குள் வந்துவிடும்.

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழுக்கள் இவற்றை, ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை வெள்ளைப் பூண்டுக் கரைசலைத் தெளிக்கலாம். பொதுவாக இலைக்கருகல், பாக்டீரியா கருகல் நோய்த்தாக்குதல் இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் சூடோமோனஸ் கலந்து இலைவழியாகத் தெளிக்கலாம். கிழங்கழுகல் நோய், வேரழுகல் நோய் இருந்தால் ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை தண்ணீரில் கலந்துவிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வேப்பங்கொட்டை வெள்ளைப்பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை 5 கிலோ, வெள்ளைப் பூண்டு அரை கிலோ இரண்டையும் சேர்த்து, அம்மியில் அரைத்தெடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, 10 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீரில் ஒருநாள் ஊறவைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி, 100 கிராம் காதிசோப்பைக் கரைத்து, 90 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கு போதுமானது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj