Skip to content

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே….

ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் :

பச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ

பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர்

காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர்

பசு மாட்டுதயிர் – 2 லிட்டர்

பசு நெய் – 500 கிராம்

நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ

இளநீர் – 3 லிட்டர்

கனிந்த வாழைப்பழம் – 12

தென்னங்கள் – 2 லிட்டர்

(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)

முதல் நாள் செய்யவேண்டியது

5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூட வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.

நான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டு சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும், கலக்கிய பின் மூடிவைக்க வேண்டியது முக்கியம்.

11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வர வேண்டும்.

19- வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாகி பாகு தன்மை ஏற்படும் பட்சத்தில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை தண்ணீரை கரைசலுக்குள் ஊற்றினால் மீண்டும் திரவ நிலைக்கு வந்துவிடும்.

பயன்படுத்தும் முறை

தெளிப்பு மற்றும் பாசன நீர்வழி உரமாக எல்லாவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்கு பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதை கூட்டவோ குறைக்கவோ கூடாது.

15 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.

தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது கண்டிப்பாக கரைசலை வடிகட்டிய பிறகுதான் தெளிப்பு செய்யவேண்டும்.

விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலரவைத்து நடவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இந்த பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர்களுக்கு கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்ட சத்துக்களை வேர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அமுத சுரபியாகவும் இருக்கும்.

                                                                                                  நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj