Skip to content

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !

தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே………..

ஒன்றரை அடி இடைவெளி !

நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டித் தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு செய்ய வேண்டும். 2 ம் நாளில் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். நிலம் காயாத அளவுக்கு பாசனம் செய்ய வேண்டும். அடைமழைக் காலத்தில் செடிகள் அழுகி, காய்ப்பு குறையும். அதை மனதில், வைத்து பருவமழைக்கு முந்தைய நாட்களில், பறிப்பு வரும்படி நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகள் வளர்ந்து நிழல் படர்வதால், களைகள் முளைக்காது.

பளபள வண்ணத்துக்கு அமுதக்கரைசல் !

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போது செடிக்கு 50 கிராம் வீதம் ஊட்டமேற்றிய மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 55 மற்றும் 70- ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ மண்புழு உரம் என்ற கணக்கில், பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். செடிகளை வேர்அழுகல் நோயிலிருந்து காப்பாற்றவும், பறிப்பு முடியும் வரை, ஊக்கமுடன் வைத்திருக்கவும், காய்கள் ‘பளபள’வென நல்ல நிறத்துக்கு வருவதற்கும் அமுதக் கரைசல் உதவுகிறது. 20, 40 மற்றும் 60-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

     நடவு செய்த 70 – ம் நாள் தொடங்கி, 120 நாட்கள் வரை காய் பறிக்கலாம்.

அடியுரமாகும் அரசாணிக்கொடி!

“தக்காளி தளதளக்கிற இந்த மூணு ஏக்கர்ல இதுக்கு முந்தி அரசாணி சாகுபடி செஞ்சிருந்தோம். அதை, அறுவடை செஞ்ச பிற்பாடு காய்ஞ்சு கிடந்த கொடிகளையும் சேர்த்து அப்படியே உழவு ஓட்டிட்டோம். அந்தக்கொடிங்க மண்ணோடு மண்ணா மட்கி, அடுத்த போக வெள்ளாமைக்கு அடியுரமா மாறிடுச்சு. அதோட தொழுவுரமும் சேருறப்போ நல்ல பலன் கிடைக்குது” என்கிறார், சோமசுந்தரம்.

ஊடுபயிரில், உபரி லாபம் !

தென்னையில் ஊடுபயிராக 50 சென்ட் நிலத்தில் பீர்க்கன் சாகுபடி செய்யும் சோமசுந்தரம், “வாரம் 200 கிலோனு 50 சென்ட்ல இருந்து மொத்தம் 3 டன் அளவுக்கு பீர்க்கன் கிடைக்கும். அதையும் நேரடியாத்தான் விற்பனை செய்றேன். சராசரியா கிலோவுக்கு 30 ரூபாய் கிடைக்கும். இது மூலமா 90 ஆயிரம் வருமானம். இதுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை” என்கிறார்.

நாற்றுகள் கவனம்!

ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் நாற்றுகள் தேவை.

ஒரு நாற்று 40 பைசா.

18 முதல் 20 நாள் வயதுடைய நாற்றுகளே சிறந்தவை.

தண்டு ஊக்கமாக 4 அங்குல உயரத்தில் இருக்க வேண்டும்.

தொடர்புக்கு,

எஸ். சோமசுந்தரம், செல்போன்: 99433-49150

 நன்றி

பசுமை விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj